ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிந்ததையடுத்து, நேற்று ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, “சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. ஆனால், அதைத் தவிர்க்கும் பொருட்டு, அமலாக்கத் துறையிடம் ஆஜராகத் தயார் என்று சிதம்பரம் தரப்பு வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹார், சிதம்பரத்தை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர் காவல் அதிகாரிகள்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர் ஒருவர், திகார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது தொடர்பாக கருத்தேதும் கூற விரும்புகிறீர்களா என்று சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சிதம்பரம், “என்னுடைய கவலையெல்லாம் பொருளாதாரச் சரிவு பற்றி மட்டுமே உள்ளது” என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.