பஞ்சாப், உ.பி. தேர்தலில்பிடிபட்டரூ.190 கோடிகருப்பா?, வெள்ளைப்பணமா?
பாரதியஜனதாஅரசுக்குப.சிதம்பரம்கேள்வி
பஞ்சாப், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிடிபட்ட ரூ. 190 கோடி பணம் கருப்பா அல்லது வெள்ளையா என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் பணப்பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால், இன்னும் ஏ.டி.எம்.கள் பயன் இன்றியே இருக்கின்றன. புதிய ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும்போது அதற்கு ஏற்றார்போல் ஏ.டி.எம். எந்திரங்களை மாற்றி அமைக்காமல், ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்துவிட்டார்கள். இதனால், இன்னும் பல ஏ.டி.எம்.களில் சீரமைக்கும் பணிநடந்து வருகிறது.
ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூலம் மாதத்துக்கு 300 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் தான் அச்சடிக்க முடியும். ஆனால், ரூ.1000, ரூ.500 நோட்டுகள் 2400 கோடி எண்ணிக்கையில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
நாட்டில் ஊழலை தடுக்கும் கொள்கையை ரிசர்வ் வங்கி அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு பதிலாக, அரசு ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. ரூபாய் நோட்டு தடை குறித்த முடிவை எடுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், ரிசர்வ்வங்கியின் 10 இயக்குநர்கள் கலந்து கொள்வதற்கு பதிலாக 2 இயக்குநர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்து மட்டும் ரூபாய் நோட்டு தடையை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று பாரதியஜனதா கட்சி நினைத்துவிடக்கூடாது.
ரூபாய் நோட்டுதடைக்கு பின் ஏராளமான ரூபாய்கள் பிடிபடுகின்றன. குறிப்பாக பஞ்சாப், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது, இரு மாநிலங்களிலும் சேர்த்து ரூ.191 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பிடித்துள்ளனர். நாட்டில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று மத்தியஅரசு கூறி வரும் நிலையில், பிடிபட்ட இந்த பணம் கருப்பு? அல்லது வெள்ளைப் பணமா? என்பது தெரிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
