ப.சிதம்பரத்திற்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்துள்ளது அக்கட்சிக்குள் மீண்டும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் மேலிடம் நீக்கி உத்தரவிட்டது. கராத்தே தியாகராஜன் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். மேலும் ப.சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. அவரை காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக நீக்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

ப.சிதம்பரத்தை விட சக்தி வாய்ந்த நபரால் மட்டுமே இந்த முடிவை எடுக்க முடியும் என்று கிசுகிசுத்தது. தனது பதவி பறிப்புக்கு கே.எஸ்.அழகிரி தான் காரணம் என்று வெளிப்படையாகவே கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டினார். ஆனால் இதனை கே.எஸ்.அழகிரி முதலில் மறுத்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆம், தன்னுடைய பரிந்துரையின் பேரில் தான் கராத்தேவை பதவியில் இருந்து மேலிடம் நீக்கியதாக கூறி அதிர வைத்தார் அழகிரி.

அதோடு மட்டும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வேட்பாளர் அறிவிப்பின் போது சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட கார்த்தி பசிதம்பரம் முயற்சி மேற்கொண்ட நிலையில் முதலாவதாக வெளியான பட்டியலில் அவர் பெயர் இல்லை. 

2-வதாக வெளியான பட்டியலில் தான் கார்த்தி பெயர் இருந்தது. இதற்காக ப.சிதம்பரம் டெல்லி சென்று தனது மகனை வேட்பாளராக்கிவிட்டு திரும்பினார். இந்த விவகாரத்தின் பின்னணியிலும் தான் இருந்ததை கே.எஸ்.அழகிரி தற்போது துணிச்சலாக கூறியுள்ளார். சிவகங்கை தொகுதியை நாசே ராமச்சந்திரனுக்கு ஒதுக்க வேண்டும் என்று மேலிடத்திற்கு தான் பரிந்துரைத்தது உண்மை தான் என்று அழகிரி கூறியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்கிற முறையில் எந்த தொகுதிக்கும் வேட்பாளரை பரிந்துரைப்பது தனது உரிமை என்று கூறினார் அழகிரி. அதாவது கார்த்தி சிதம்பரத்திற்கு பதில் வேறு ஒரு வேட்பாளரை தான் பரிந்துரைத்ததை வெளிப்படையாக அழகிரி அறிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கை தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்திற்கு தர வேண்டிய கஜா புயல் நிவாரணத்தை மத்திய அரசு தரவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று ப.சிதம்பரம் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். போராட்டங்களை நடத்த வேண்டும் என்றால் கே.எஸ்.அழகிரியின் சம்மதத்தை ப.சிதம்பரம் பெற வேண்டும். ஆனால் அதைபற்றி எல்லாம்கவலைப்படாமல் சிதம்பரம் அறிவித்துள்ளதுமோதலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.