காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று கூறுகையில், “ அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதலில் புதிய சட்டமன்றத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். ஆட்சி அமைக்க ஒரு தரப்பினர் மட்டும் உரிமை கோரினால், அவர்களிடம் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம். ஆனால், இரு தரப்பினர் ஆட்சி அமைக்க கோரினால், உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்ததைப் போல், இரு தரப்பினரையும் அழைத்து ஒரே சமயத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கடந்த 1998-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரே கட்சியை சேர்ந்த கல்யான் சிங், ஜகதாம்பிகா பால் இடையே இதே போன்ற சூழல் ஏற்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சிறப்பு கூட்டத்தை கூட்டத்தை கூட்டி, இருவரில் யாருக்கு பெரும்பான்மை என்பதை தீர்மானிக்க, அங்கேயே ஒரே சமயத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதைப் பின்பற்றி தமிழகத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு , அது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், அவர் , “ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.