வெட்டிக்கோ, ஒட்டிக்கா மறுபடியும் வெட்டிக்கோ! எனும் விளையாட்டு ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் செம்ம எடுப்பாக பொருந்தும். நட்பாய் போவது போல் இருக்கும் இவர்களின் கூட்டணியில் லேட்டஸ்டாய் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியில் ஏதோ சிக்கல். இதை உறுதிப்படுத்தும் விதமாக திருமா வெளியிட்டிருக்கும் ஸ்டேட்மெண்டால் அநியாயத்துக்கு கடுப்பாகி இருக்கிறது ஸ்டாலின் வகையறா. 

கடந்த சில வாரங்களுக்கு முன், திருமா, வைகோ இருவரும் தங்கள் கூட்டணியிலேயே இல்லை எனும் ரீதியில் துரைமுருகன் கொளுத்திப் போட, அதை தொடர்ந்து அலறி அடித்துக் கொண்டு இருவரும் தனித்தனியாக அறிவாலயம் சென்று, ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை ஒருவழியாய் உறுதிப்படுத்தினர். திருமாவும் முடிந்த அளவுக்கு ஸ்டாலினை ‘வருங்கால முதல்வர்! முதல்வர்!’ என்றே உயர்த்திப் பிடிக்கிறார். 

சமீபத்தில் திருச்சியில் வி.சி.க. சார்பில் நடந்த சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு விளம்பரத்தில் கூட  மற்ற தலைவர்களின்  போட்டோவை விட ஸ்டாலினின் போட்டோவை பெரிதாய் போட்டு, மற்றவர்களின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார் திருமா. இந்தளவுக்கு இறங்கி வந்து, தாஜா செய்தும் கூட தி.மு.க. பெரிதாய் திருமாவை கண்டுகொள்வதில்லை என்பதே ரவிக்குமார், வன்னியரசு போன்ற வி.சி.க. முக்கிய நிர்வாகிகளின் கவலை.

 

இந்நிலையில், சமீபத்தில் ஸ்டாலினுக்கும் திருமாவுக்கும் இடையில் ஏதோ ஒரு உரசல் உருவாகி இருக்கிறது! என்று அரசியல் பார்வையாளர்கள் கொளுத்திப் போட்டனர். ”அதாவது வி.சி.க.வுக்கு ஸ்டாலின் ஒதுக்க முடிவெடுத்திருக்கிறதா சொன்ன தொகுதிகளின் எண்ணிக்கையையும், தொகுதி பெயரையும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் வி.சி.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் ரகசியம் போல் சொல்லி அதை திருமாவின் காதுகளுக்கு சேர்த்திருக்கிறார்கள். 

டென்ஷனின் உச்சம் சென்ற திருமா ‘இதுக்கு மேலே எவ்வளவுப்பா  பணிஞ்சு  போறது? மக்கள்நல கூட்டணியால் 2016 தேர்தல்ல தி.மு.க.வோட ஆட்சி வாய்ப்பு பறிபோனது உண்மைதான். அதுக்காக இன்சல்ட் இவ்வளவா பண்றது?’ என்று பொங்கிவிட்டாராம். அரசியல் வார இதழ் ஒன்றுக்கான பேட்டியில், ‘ஸ்டாலினை அடிக்கடி சந்திக்கிறேன், உரையாடுகிறேன். எங்களுக்கு இடையில் எந்த பிரச்னையும் இல்லை. இணக்கமான சூழல் இருக்கிறது.’ என்று துவக்கத்தில் நேர்மறையாக பேசியவர், பின் ‘தி.மு.க. அணியில் எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

 

ஆனால் நான் என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் இந்த முறை போட்டியிடுவேன்.’ என்று வெளிப்படையாக கூறியுள்ளார். திருமாவின் இந்த வெடி ஸ்டேட்மெண்டை கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள். ‘கூட்டணிக்குள்ளே போய் உட்கார்ந்த பிறகும் ஓவரா இம்சை பண்றார் ஸ்டாலினு. அதான் தலைவர் உட்டாரு பாரு ஒரு ஸ்டேட்மெண்டு, நான் சிதம்பரத்துலதான் நிற்பேன்னு. ஸ்டாலின் அங்கே சீட் கொடுக்காட்டியும் பரவாயில்லைங்கிற தொனியில தலைவர் மிரட்டிட்டாருல்ல?’ அப்படின்னு கொக்கரிக்கிறார்கள். ஆக ஸ்டாலின், திருமா இடையில் மீண்டும் உரசல் உருவாகியுள்ளது உண்மையே.” என்கிறார்கள். கூட்டணி விஷயங்கள் பேசி முடிச்சு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னே, சிதம்பரம் எனக்கே! என்று திருமா பேசியதை ஸ்டாலின் ரசிக்கவேயில்லை என்பதே லேட்டஸ்ட் தகவல்.