உள்துறை அமைச்சராக, மத்திய அமைச்சராக பெரும் மதிப்போடு சமுதாயத்தில் வலம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் 74 வயதின் இறுதியில் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்.

திஹார் சிறையில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அதே அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ப.சிதம்பரம். சிறை செல்லும் முன் மருந்துகள், மூக்கு கண்ணாடி, தனி அறை, பத்திரிகை, வீட்டு உடை, வெஸ்டர்ன் டாய்லெட் வசதிகள் கோரியது அவருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன்பே சிதம்பரத்திற்கான அறையை தயார் செய்து விட்டார்கள் சிறைத்துறை அதிகாரிகள். அவர் உறங்குவதற்கு மரக்கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து உடைகள் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று இரவு ரொட்டி, பருப்பு, அரிசி வகை உணவுகள் வழங்கப்பட்டாலும் குறைவாகவே அருந்தினார். ஆனாலும் கொஞ்ச நேரமே தூங்கியதாகக் கூறப்படுகிறது. 

இன்று காலை அவருக்கு தென்னிந்திய வகை உணவுகள் கொடுக்கப்பட்டாலும் அதையும் சிறிதளவே எடுத்துக்கொண்டார் சிதம்பரம். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையின்  அளவு 100 சதுரடி. அங்கு முதல் வகுப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கட்டில், மின் விசிறி ஆகியவை உள்ளன. அதற்குள் 5 அடி உயர சுவருடன் தனியாக கழிவறை உள்ளது.

அவர் இருக்கும் வளாகம் பொருளாதார குற்றங்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படும் பகுதி. அந்த பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் உயர் அந்தஸ்து கொண்ட ஏ-வகுப்பு குற்றவாளிகளுக்கு தனி அறைகள் உள்ளன. ப.சிதம்பரம் ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்தவர் என்பதால் அவர் இருக்கும் அறை பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி அவர் சிறை அறை முன்பு 24 மணி நேரமும் 7 காவலர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு ஜெயில் அதிகாரியும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்.

ப.சிதம்பரத்துக்கு வாரத்தில் 2 நாட்கள் அசைவ உணவுகள் வழங்கப்படும். தினமும் 400 மில்லி பால் வழங்கப்படும். அவர் அசைவ உணவு வேண்டாம் என்று மறுத்து விட்டால் சைவ உணவு வழங்கப்படும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறை அறைக்குள் இருந்து வெளியே வந்து இருக்க ப.சிதம்பரம் அனுமதிக்கப்படுவார்.