ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் செப்டம்பர்  19 ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பொருளாதார குற்றவாளிகளுக்கான பகுதியில் உள்ள ஏழாம் எண் சிறையில் அடைக்கப்பட்டார். 

.இந்த நிலையில் நேற்று இரவு சிதம்பரத்திற்கு காய்கறிகள் மற்றும் பருப்புடன் சப்பாத்தி கொடுத்துள்ளனர். ஆனால் அதை சாப்பிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறையில் உள்ள கேன்டீனிலும் உணவு எடுத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். 

சிதம்பரத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு காரணங்களால் சிசிடிவி கேமிராவாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதேபோல் அவர் இருக்கும் சிறையில் தமிழக காவலர்கள் யாரும் பணியில் அமர்த்த படவில்லை. 


 
சிதம்பரம் இருக்கும் அறைக்கு தினமும் பத்திரிகைகள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். சிறைச்சாலையில் இருக்கும் நூலகத்தையும, டிவியையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு தலையணை மற்றும் கம்பளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெஸ்டன் ஸ்டைல் கழிப்பறை, மருந்துகள் வைத்துக் கொள்ள கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முதல்நாள் அவர் தூக்கமின்றி தவித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..