காற்று மாசு அதிகரிக்க இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளே காரணம் என குற்றச்சாட்டிய அன்பு நண்பரை நமஸ்தே டிரம்ப் ஊர்வலத்திற்கு மோடி மீண்டும் அழைப்பாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்த உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்த விவாதத்தில் பேசிய ஜோ பைடன், அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறிவிட்டது. அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்றார். இதற்கு பதில் அளித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை இந்தியா பகிரவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், புவி வெப்பமடைதலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா தான் காரணம் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அதிபர் தேர்தல் விவாதத்தின் போது கொரோனா உயிரிழப்பை இந்தியா, ரஷ்யா, சீனா மறைப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். காற்று மாசு அதிகரிக்க இந்த 3 நாடுகளே காரணம் என்றார். இந்த சூழ்நிலையில், தமது அன்பு நண்பரை நமஸ்தே டிரம்ப் ஊர்வலத்திற்கு மோடி மீண்டும் அழைப்பாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நேற்றைய பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ஜெசிக்காவை யாரும் கொல்லவில்லை என சில ஆண்டுக்கு முன் வேதனையுடன் கூறினோம். அதேபோல், மசூதியை யாரும் இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையான அழுகையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.