தேசத்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்: பிறந்த நாளன்று பொருளாதார கணக்கில் பொடிவைத்த ப.சிதம்பரம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைவை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனது பிறந்தநாளான இன்று பொருளாதார கணக்கை குறிப்பிட்டு நாட்டை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்க வரும் 19-ம் தேதிவரை நீதிமன்ற காவல் இருக்கிறது. ப.சிதம்பரத்துக்கு இன்று 74-வது பிறந்தநாளாகும். தனது பிறந்தநாளான இன்று தனது குடும்பத்தாரின் மூலம் ட்விட்டரில் சிதம்பரம் கருத்துத்தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது “எனது குடும்பத்தினர் இன்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நலம் விரும்பிகள்,கட்சி தோழமைகள், வாழ்த்து கூறினர். எனக்கு 74 வயது என்பது நினைவிருக்கிறது. உண்மையில் ஆனால், மனதளவில் நான் இளைஞன். அனைவருக்கும் நன்றி, எனது உணர்ச்சி, உற்சாகம் உயர்வாக வைக்கட்டும்.
இன்றைய தினம் எனது எண்ணங்கள் பொருளாதாரத்தைப் பற்றியே இருக்கிறது. ஒரு புள்ளிவிவரம் மூலம் ஒரு கதை சொல்கிறேன். ஆகஸ்ட் மாதத்துக்கான ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் -6.05 ஆக சரிவு கண்டிருக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி இல்லாமல் எந்த நாடும் உலகில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர முடியாது. இந்த தேசத்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் “ எனத் தெரிவித்துள்ளார்