chidambaram blames enforcement raid

அமலாக்கத்துறையின் சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காக, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக இந்த நிறுவனத்துக்கு ஒரு தொகை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கடந்த ஆண்டும் மே மாதம் மற்றும் டிசம்பர் ஒன்றாம் தேதி ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இன்றும் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. வழக்கின் அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த காவல்நிலையத்திலுமோ, சிபிஐ போன்ற அமைப்பிலுமோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. 

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் எங்கள் வீடுகளில் இதுவரை 3 முறை சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினர் சோதனைக்கான அனுமதி ஆணையை காண்பித்தனர். இன்று தில்லியில் உள்ள வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை என பல அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் அனைவரும் மரியாதையுடன் நடந்து கொண்டனர். 

சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமலாக்கத் துறை சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம். 2012-13 கால கட்டத்தில் ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் வாசித்த சில அறிக்கைகள் அடங்கிய காகிதங்களை எடுத்து சென்றுள்ளனர் என சிதம்பரம் தெரிவித்தார்.