முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பினர் மேல் முறையீடு செய்தனர். மனுவை பட்டியலிடாமல் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தது. 

இதனிடையே, கைதுக்க பயந்து ப.சிதம்பரம் தலைமறைவானார் என செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருகை தந்தார். அவர் அங்கு இருப்பதை அறிந்த 15-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அந்த வீட்டின் சுவர்ஏறி குதித்து ப.சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தனர்.  

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களை திசைத்திருப்புவதற்காக ப.சிதம்பரத்தை பாஜக அரசு கைது செய்துள்ளது. கொலை குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை சி.பி.ஐ. புனைந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மோடிக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். 

இதனிடையே, சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை குண்டுகட்டாக கைது செய்து வேனி ஏற்றினர். இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.