முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகள், அலுவலகங்கள்  உள்ளிட்ட 14 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், சிதம்பரம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தமக்கும் தமது மகனுக்கும்  எதிராக, மத்திய அரசு சி.பி.ஐ அமைப்பை  ஏவி விட்டுள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அனைத்து அனுமதிகளும், நேரடி அந்நிய முதலீட்டு அமைப்பின் மூலமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற 100 க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட 5 செயலர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்ட விதிகள் படி தான் கோப்புகள் ஒப்புதல் வழங்கப்படும். என் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. சிபிஐ மூலம் என்னை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

எதிர்கட்சியினர், பத்திரிகைகள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து  மத்திய அரசு அடக்க நினைக்கிறது என்றும், ஆனாலும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுப்பிரமணியன் சாமி, சிறையில் இருக்க வேண்டியவர் சிதம்பரம் என்று கூறி உள்ளார்.

மேலும், சிதம்பரம், இந்து தீவிரவாதம் என்று கூறி தீவிரவாத வழக்குகளை திசை திருப்பியவர்.  சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை, லஷ்கர் இ தொய்பா நிகழ்த்தவில்லை, இந்து அமைப்பு  செய்ததாகவும் கூறியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சிதம்பரம்  ஒரு மோசடி நபர், பொய்யர். அவர் சிறையில் இருக்க வேண்டியவர். வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட முதலீடுகளில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. 

முறைகேடாக சிதம்பரம் அனுமதி வழங்கியதும், அவரது மகன் கார்த்தி, சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் பணம் பெறுவது வாடிக்கையாக இருந்துள்ளது.

 ப.சிதம்பரத்திற்கு 18 நாடுகளில் வங்கி கணக்கு, சொத்துக்கள் உள்ளன என்றும் அந்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே,  ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

போலி நிறுவனங்கள் மூலம் பீஹார் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி உள்ளிட்டோர் பினாமி சொத்துகளை மாற்றியதாக எழுந்த புகாரின் பேரில், டெல்லி, பாட்னா உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.