cheran should stop his hated speech actor vishal warns
இயக்குனர் சேரன் இனியாவது வீண் விளம்பரம் தேடாமல் திருந்தட்டும்... இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று கூறியிருக்கிறார் விஷால்.
விஷால் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து இயக்குனர் சேரன் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டதுடன், ஊடகங்களிலும் பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக விஷால் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பவை...
இயக்குநர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன.
ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத் தான் பார்க்கிறேன்.
சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.
எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பிப் பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்.
என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.
சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
