தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்  மாநிலம் முழுக்க கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது , நேற்று புதிதாக 203 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது இது தமிழகத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் ,  தமிழகம் கொரோனா தாக்கத்தை அடிப்படையாக கொண்டு   சிவப்பு மண்டலம் ஆரஞ்சு மண்டலம் பச்சை மண்டலம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது . மொத்தம் 12 மாவட்டங்கள் சிவப்புநிற மண்டலமாகவும் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் சென்னை மதுரை நாமக்கல் தஞ்சாவூர் செங்கல்பட்டு திருவள்ளூர் திருப்பூர் ராணிப்பேட்டை விருதுநகர் திருவாரூர் வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்பு நிற மாவட்டங்களாக எச்சரிக்கப்பட்டுள்ளது , 

இந்நிலையில் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடுத்த மூன்று நாட்களுக்கு  சென்னையில் இருந்து வரும் வாகனங்களுக்கு  வேலூர் மாவட்ட  எல்லையில்  நுழைய தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்  நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எஸ்.பி பிரவேஸ் குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் மாவட்ட எல்லையான அரப்பாக்கம் சோதனைச்சாவடி வழியாக வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  சொந்த வேலை , வியாபாரம் என  பைக்குகளில் வந்த பொதுமக்களை  திரும்பி செல்லுமாறு போலீசார் கூறினர். அடையாள அட்டையுடன் வந்து அரசு ஊழியர்கள்  மட்டும் மாவட்ட எல்லையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 

சென்னையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்,  அனுமதி கடிதம்  பெற்று சிகிச்சைக்கு வந்தவர்களை தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதித்தனர் ,  குறிப்பாக சென்னையிலிருந்து வந்த வாகனங்கள்  வேலூர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது இது குறித்து தெரிவித்த போலீசார் வேலூர் மாவட்ட எல்லையில் வாகனங்கள் நுழைய அடுத்த மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .  வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் தீவிர சோதனைக்குப்பிறகு அனுமதிக்க படுவதாக அவர்கள் தெரிவித்தனர் .  வேலூர் மாவட்டம நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால்  அவசர ஆபத்திற்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.