காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் வீரியம் அடைந்து வருகிறது. .ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தி வருகிறார். திருச்சி, முக்கொம்புவில் தொடங்கிய இந்த நடைபயணம் இன்று கடலூரில் முடிவடைகிறது.

இந்த நிலையில், காவிரி மேலாண் வாரியம் அமைக்கக்கோரி, தமிழ்த் திரையுலகினர் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மௌன விரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர்கள், நகைககள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர், நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி போராட்டத்தை முன்னிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது தான் பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கை என்றார்.

ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது. அப்போதுதான் போராட்டம் தடைபடாமல் நடக்கும். போட்டியை நிறுத்த முடியாது என்றாலும் வீரர்கள் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம். ஐபிஎல் போட்டியில் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜுடன் ஆட வேண்டும். சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டியில் கருப்பு பேட்ஜுடன் ஆடலாம். ரசிகர்கள் கருப்பு கொடியுடன் களத்திற்கு செல்லலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.