chennai submerged but cm in coimbatore to inaugurate bridge

’கும்பி வாடுது, சென்னை மூழ்குது...இந்த சூழலில் கோவையிலே ஆடம்பர விழா ஒரு கேடா?’ என்று தமிழக முதல்வர்கள் இருவரையும் இணையத்தில் வறுத்தெடுக்கிறது தி.மு.க.

கோவை சிட்டியின் மையப்பகுதியான காந்திபுரத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் முதல் மற்றும் முக்கிய பாதையை இன்று நேரில் திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில் துணை முதல்வர் பன்னீர் உள்ளிட்ட ஆட்சி இயந்திரத்தின் ரதகஜபடைகளும் கலந்து கொள்கின்றனர். 

இதற்காக மேம்பாலத்தின் முகப்பு பகுதியில் அசத்தல் மேடை அமைக்கப்பட்டு நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை உள்ளிட வட மாவட்டங்களை பெரும் மழை திணறடித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த கோலாகல விழா அவசியமா? என்று இணைய தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் விமர்சன நெருப்பை பற்ற வைத்துள்ளனர். 

’’இங்கே சென்னைவாசிகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். வீடு, பள்ளிகளுக்குள் நீர் புகுந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மின்சாரமில்லை, குடிநீரில்லை என்று மக்கள் குமுறிக் கொண்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை நகர முடியாமல் நாதியற்று கிடக்கிறது.

இந்த கொடூரங்களின் உச்சமாக கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்சார கம்பியின் வழியே பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் இரு பெண் பிஞ்சுகள் இன்னுயிரை இழந்திருக்கின்றன. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தீயணைப்பு உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் முக்கிய அதிகாரிகள் முதல்வர் விழாவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். 

இதுதான் அரசாங்கமா? இதுதான் பேரிடர் எதிர்கொள்ளும் முறையா? இதுதான் ஆள்வோரின் அழகா? ஆக நீரோ மன்னன்களுக்கு நடுவில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறோம். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த மேம்பாலம் அறிவிக்கப்பட்டது கடந்த தி.மு.க. ஆட்சியில். கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது இந்த அறிவிப்பு வெளியானதை தமிழ் உலகத்தினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்!” என்று நீட்டி முழக்கியுள்ளனர். 

இந்த அதிரடிக்கு பதிலடியாக, தி.மு.க. ஆட்சியின் போது நடந்த சம்பவங்கள் எதையாவது நிச்சயம் அ.தி.மு.க.வினர் நோண்டியெடுத்து நினைவூட்டுவார்கள்.
ஹூம்! மழையும், வெயிலும், டெங்குவும், டிங்குவும் இவர்களுக்கு அரசியல். ஆனால் மக்கள்தான் பாவம்.