சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,227ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட உத்தரவுகளில் நாளை முதல் சென்னை மாநகரில் உள்ள 650க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசை பகுதிகள் உள்ளது. அந்த குடிசை பகுதிகள் மக்கள் 26 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு நாளை முதல் சுமார் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஒவ்வொரு பொதுமக்களுக்கும் 2 முகக்கவசம் வீதம் மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடையே கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாளர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து தொற்று பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வெளியே சென்று பணிபுரிய வேண்டியுள்ள நிலையில் வீடுகள்தோறும் சென்று பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.