chennai silks will be demolished in 3 days
தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் 3 நாட்களில் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 25 மணி நேரம் நீடித்த இந்த விபத்தை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி அணைத்தனர். ஆனாலும், எரிந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் 2 முதல் 7வது மாடி வரை இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், எவ்வித அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் 11 பேரை பத்திரமாக மீட்டனர். நேற்று அதிகாலை முதல் இதுவரை 200க்கு மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய இந்த கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த பணியில் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
இந்த கட்டிடம் உறுதி தன்மை வாய்ந்ததா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி, கட்டிட மேலாண்மை, வருவாய் துறையினர், காவல் துறையில் செய்து, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.
கட்டிட தன்மை குறித்து அவர்கள் தரும் அறிக்கையின் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதே நேரத்தில் உறுதி தன்மை இல்லை என்பது தெரியவந்தால், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் இந்த கட்டிடம் இடிப்பதற்கான அனைத்து பணிகளும் தொடங்கப்படும். இதற்காக சிறப்பு மெஷினை, சென்ட்ரலில் இருந்து வரழைத்துள்ளோம். ஒரு மணிநேரத்தில் அந்த மெஷினை கொண்டு, இலகு வகையாக கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கும். கட்டிட இடிப்பு பணி 3 நாட்களில் முடிந்துவிடும்.
கட்டிடம் இடிக்கும்போது, அந்த பகுதியில் குறிப்பிட்ட தூர மீட்டருக்குள் எந்த கட்டிடத்திலும் பணிகள் நடக்காது. அனைத்தும் மூடப்படும். அதே நேரத்தில், இந்த கட்டிடத்தை இடிக்கும்போது, மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், அதிகாரிகள் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்குவார்கள்.
.jpg)
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்துபோல மீண்டும் வேறு விபத்து ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அனைத்து கட்டிடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதனால் வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக பணிகளை தீயணைப்பு துறை, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.
மேலும் இக்கட்டிடத்தை இடிக்கும் பணிக்கான செலவு அனைத்தும், சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
