சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை பிரிவு ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.22 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மேம்பாலம் அருகில் நடந்த விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி  பேசிய முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  , சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த வழக்கு முடிந்ததும் 8 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

.

சேலத்தை சேர்ந்த நான் முதலமைச்சராக  இருப்பதால் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனக்கென்ன சேலத்தில் 10 தொழிற்சாலையா இருக்கிறது 8 வழிச்சாலை போடுவதற்கு?. என கேள்வி எழுப்பினார்.

சேலம் மட்டுமின்றி அருகில் உள்ள நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.இதனால் அந்த மாவட்ட மக்களுக்கு இந்த 8 வழிச்சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பசுமை சாலை அமையும் பட்சத்தில் 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். வாகனங்களுக்கு எரிபொருள் மிச்சம் ஆகும்.

சுற்றுச்சூழல் மாசு மற்றும் பயண நேரம் குறையும். விபத்து ஏற்படாமல் நவீன தொழில்நுட்பத்தில் சாலை அமைக்கப்படும். பொதுவாக சாலை வசதிகளை மேம்படுத்தினால் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அவ்வாறு புதிய தொழிற்சாலைகள் வந்தால் பொருளாதாரம் மேம்படும். பொருளாதாரம் மேம்பட்டால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும்.

எனவே, 8 வழிச்சாலையை சிலர் தேவையில்லாமல் எதிர்க்கிறார்கள். வெளிநாடுகளில் 8 வழிச்சாலை மட்டுமின்றி 10 மற்றும் 12 வழிச்சாலைகள்கூட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தினால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும் என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.