சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பூனையை மீண்டும் சீனாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார் .  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-  தமிழகத்தில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது .  அதை உடனடியாக சீனாவுக்கு திருப்பி அனுப்ப சென்னை துறைமுகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

காரணம் வைரஸ் பாதிப்பு உலக அளவில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் சீனாவில் இருந்து சென்னைக்கு கப்பலில் வந்த  பூனை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது  . அதேபோல் உணவுப்பொருட்கள் இருந்த கண்டெய்னரில் பாம்பு இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன .  ஆகவே பூனை மற்றும் பாம்பு இருந்ததாக வரும்  செய்தியால் மக்கள் அச்சபடுவதற்கு வாய்ப்பு உள்ளது . எனவே இதற்கு இடம் கொடுக்கக் கூடாது ,  கப்பலில் பொம்மைகள்  வைக்கப்பட்டிருந்த அறையில் பூனை  இருந்ததும்  பாம்பு இருந்ததும்  சந்தேகத்திற்கு வழிவகுக்கிறது.   தமிழகத்தில் கொரோனா  வைரஸ் இல்லை என்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசும் கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. 

இருப்பினும் கொரோனா வைரஸ்  பாதிப்பில் இருந்தும்  அச்சத்தில் இருந்தும் பொதுமக்கள் மீளும்வரையில்  சீனாவிலிருந்து எப்பொருளையும் ,   மனிதரையும் எந்த விலங்குகளையும் தரைவழியாகவோ ,  ஆகாயம் மற்றும் கடல் வழியாகவோ அனுமதிக்காமல் இருப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும் .  சென்னை துறைமுக அதிகாரிகள் துறைமுக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது முறையானது என்றாலும்கூட இச்சூழலில் சீனாவிலிருந்து வரும் உயிருள்ள ஜீவன்களையும் மற்றும் உயிரற்ற பொருட்களையும்  அனுமதிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டு கப்பல்களை கண்காணித்து அதிலுள்ள அனைத்தையும் சோதனை செய்தபிறகே இறக்குமதிக்கு அனுமதி செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறேன் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.