உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முதலில் அதிகாரத்திற்கு வந்தது சென்னை மேயர் எனும் பதவியின் மூலமாகத்தான். அதற்கு முன்பு வரை சென்னை மேயர் என்பது சம்பிரதாயமான ஒரு பதவியாகவே இருந்தது. ஆனால், அந்த பதவியை வைத்து சென்னையை மேம்படுத்த ஸ்டாலின் போட்ட திட்டங்கள் ஏராளம். ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த காலகட்டத்தில் தான் பாலங்கள் அதிகம் கட்டப்பட்டன. மக்கள் ஓய்வெடுக்க பூங்காக்கங்கள் அமைக்கப்பட்டன. சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. அழகுபடுத்தப்பட்டன. சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து டெக்கரேசன் செடிகள் நடப்பட்டன.

சொல்லப்போனால் சென்னை நகரம் அழகாக மிளிர ஆரம்பித்தது ஸ்டாலின் மேயரான பிறகு தான். இதே போல் ஸ்டாலின் புகழ் பெற ஆரம்பித்ததும் மேயர் பதவிக்கு வந்த பிறகு தான். போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 1996ம் ஆண்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆனார் ஸ்டாலின். அப்போது அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

மாறாக கலைஞர், தனது மகன் ஸ்டாலினை மேயர் ஆக்கினார். பின்னர் தான் ஸ்டாலின் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற ஆரம்பித்தார். இதே போல் உதயநிதி ஸ்டாலினுக்கும் தந்தை இருந்த மேயர் பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசை என்கிறார்கள். ஆனால் தந்தை ஸ்டாலினோ திமுக ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பிறகு 2001ம் ஆண்டு எதிர்கட்சியான பிறகும் கூட மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

 

அதே போல் தானும் தற்போது மேயர் பதவிக்கு களம் இறங்க முடிவு செய்துள்ளதாக உதயநிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் தோல்வி மூலமாக உதயநிதிக்கு எதிராக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை தவிடுபொடியாக்க மேயர் தேர்தல் உதவும் என்று உதயநிதி தரப்பு நம்புகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சென்னை திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

எனவே சென்னையில் போட்டியிடுவது உதயநிதிக்கு எளிதாக வெற்றியை தேடித்தரும் என்று நம்புகிறார்கள். அந்த வகையில் தற்போதே சில முன்பணிகளை உடன்பிறப்புகள் துவக்கிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மகன் தேர்தல் களம் காண தற்போது வரை ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.