முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் நேரடி வாரிசுகளாக அறிவித்து திருத்தம் செய்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் இல்லம் உள்பட சுமார் 913 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க்கோரி அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் அண்ணனான ஜெயராமனின் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 27-ம் தேதி தீர்ப்பு அளித்தது.


அந்தத் தீர்ப்பில், ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் என்றும் அங்கே முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தது. மேலும் தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில், இந்து வாரிசு முறைச் சட்டப்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்கக்கோரி தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அதில் திருத்தம் செய்தனர். அதன்படி, இந்து வாரிசு முறை சட்டத்தின்படி, திருமணம் ஆகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதாலும் தீபாவையும் தீபக்கையும் அவருடைய வாரிசுகள் என்று அறிவிக்கிறோம். தீர்ப்பில் இவர்களை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று குறிப்பிட்டதை நீக்குகிறோம். அதற்கு பதில் இவர்கள் நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பில் திருத்தம் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.