சென்னை உயர்நீதிமன்ற  முன்னாள் நீதியரசர் கே .சந்துரு‘காவலர்களின் நண்பன்’ ஒரு சட்டவிரோத அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை:- சாத்தான்குளத்தில் இரு வணிகர்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்த காவலர்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவரும் இந்த நேரத்தில், காவலர்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு துணை நின்ற ஒரு கூட்டத்தைப் பற்றியும் அச்சத்துடன் பேசுகிறார்கள் மக்கள். சீருடை அணியாத ‘காவலர்களின் நண்பன்’ (Friends of Police) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் அந்தக் கூட்டத்தினர். `இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா, இந்த அமைப்பு சட்டபூர்வமானதா?’என்றால் இல்லை. நாடு முழுவதும் இந்த அமைப்பினரைப் பயன்படுத்தி காவல்துறையினர் செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. தமிழகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ‘காவலர்களின் நண்பன்’ என்று சிலருக்கு அடையாள அட்டை கொடுத்துவைத்திருக் கிறார்கள். அந்தந்த மாவட்ட/மாநகர காவல்துறை தலைமை அதிகாரி இந்த அடையாள அட்டையை விநியோகித்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களது தலைமை நிலையம், `தமிழக காவல்துறை தலைவர் அலுவலகம்’ என்றும் கூறப்படுகிறது. ‘காவலர்களின் நண்பன்’ குழுவினர் தன்னார்வலர்கள்போலச் செயல்படுகிறார்கள் என்று காவல்துறை தரப்பில் சொல்கிறார்கள். 

இவர்களை யார் தேர்ந்தெடுக்கிறார்கள், இவர்களின் வேலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. கேட்டால், `தன்னார்வ சமூகப் பணி’ என்பார்கள். சமுதாயக் காவல் பணிபுரிவதற்காக இந்த அமைப்பை அன்றைய காவல்துறை தலைவர் பிரதீப் பிலிப் (இ.கா.பணி) தொடங்கி வைத்ததாக விக்கிபீடியாவில் தகவல் உள்ளது. இந்த அமைப்பு 1888-ம் வருடத்திய சென்னை போலீஸ் சட்டத்தின்கீழ் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் ‘காவலர்களின் நண்பன்’ என்ற அமைப்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை. அதேசமயத்தில் இந்த அமைப்பின் நோக்கத்தைப் பற்றி காவல்துறையின் வலைதளத்தில் ‘சமுதாயக் காவல்பணியில் ஒரு கூடுதல் படையாகச் செயல்படுபவர்கள்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில்/தமிழகத்தில் இதுவரை காவலர்கள் வன்முறையில் ஈடுபட்ட பல சம்பவங்களில் சீருடையே அணியாமல் சிலர் அதில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. அதைவைத்துப் பார்க்கும்போது காவல்துறையினர் மாமூல் வசூலித்தல், வழக்குகளில் லஞ்சம் பெறுதல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் தங்களுக்குப் பிடிக்காத பொதுமக்களைத் தாக்குதல் உள்ளிட்ட தங்களது இன்ன பிற சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக இப்படியொரு படையை உருவாக்கிச் செயல்படுவது தெரியவருகிறது. தமிழகத்தில் ‘காவலர்களின் நண்பன்’ படையில் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவலும் இல்லை. ஆனால், இந்த அமைப்பு 25 வருடங்களாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு காவல் படைக்காக அரசு அளிக்கும் மானியம் பற்றிய தகவல்களிலும் இந்தப் படையினர் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. அப்படியெனில் ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் உள்ள சிறப்பு செலவீனத்திலிருந்து அவர்களுக்கு ‘படி’ வழங்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது அவர்களும் மக்களிடம் மிரட்டி காசு வாங்குகிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது. திருப்பத்தூரில் நக்சல்கள் வேடையாடப் பட்டபோது பொதுமக்கள் அடைந்த துன்பங்கள் சொல்லி மாளாது. அதை விசாரிக்க உண்மை அறியும் குழுவினர் திருப்பத்தூர் சென்றபோது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சீருடை அணியாத ஆட்கள் புகுந்து தாக்கினர். பெட்டி படுக்கைகளை எடுத்து தெருவில் வீசினர். ஒருவேளை அந்த ஆட்கள் அதிகாரபூர்வமற்ற ‘காவலர்களின் நண்பர்’களாக இருக்கக்கூடும். அப்போது அந்த மண்டல காவல்துறை தலைவராக இருந்த தேவாரம் ஐ.பி.எஸ், ‘தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் பொதுமக்கள்’ என்று சமாளிக்க முயன்றார். ஆனால், இப்போது ‘காவலர்களின் நண்பன்’ என்ற ஒரு படையை அதிகாரபூர்வமாக அமைத்து காவல்துறை தனது சட்டவிரோத நடவடிக்கை களை நிறைவேற்றிக்கொள்கிறது. இதற்காக எந்தச் சட்டத்திருத்தமோ அல்லது சட்டப்பேரவையின் ஒப்புதலோ பெறப்படவில்லை. ஒரு சீருடைப் படை தனது காரியங்களுக்கு உதவுவதற்காக வேறு தனி நபர்களையோ அல்லது அமைப்பையோ நிறுவ வேண்டும்/பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்குச் சட்ட அங்கீகாரம் தேவை.மிருகவதை தடுப்பு சட்டத்தின்கீழ் மிருகங்களைத் துன்புறுத்துவோரைக் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வர, தனியார் அமைப்புகளுக்கு தமிழ்நாடு காவல்துறை சட்டப் பிரிவு 24-ல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ‘காவலர்களின் நண்பன்’ என்ற படை சட்ட அங்கீகாரம் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. 

சாத்தான்குளம் கொடூர சம்பவத்திலும் இந்தச் சட்டவிரோதப் படையினரின் பங்கு நிறைய இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அங்கு இவர்கள் உட்பட காவலர்கள் மிருகவெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டுபிடிக்க முடியாதபடி கண்காணிப்பு கேமரா பதிவுகள் 24 மணி நேரத்தில் அழிந்துபோகும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கையாண்டுள்ளனர். மேலும், கேமராக்கள் இல்லாத பகுதியை அவர்களது சித்ரவதைக் கூடமாக மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்து நடத்திவரும் வழக்கில் காவலர்களின் சித்ரவதைகளைப் பட்டியலிட்டுக் கண்டித்ததுடன், இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் கூண்டோடு ஊர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவரையே ‘‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று கொச்சையாக எடுத்தெறிந்து பேசும் காவலர்களை நீதித்துறை இதுவரை கண்டதில்லை.`அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது’ என்று நடத்தை விதிகள் உள்ளன. ஆனால், ‘காவலர்களின் நண்பன்’ படையினருக்கு அப்படியெல்லாம் தடைகள் எதுவும் இல்லை. எனவே, எளிதாக இப்படையினர் அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவ முடியும். இதனால், காவல்துறையின் கடமைகள் அரசியல் ஆக்கப்படுவதுடன், அது ஜனநாயகத்துக்கே ஆபத்தை விளைவிக்கும்.தற்போது அனைவரும் பரவலாக காவல்துறை சீர்திருத்தங்கள் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். சீர்திருத்தங்களில் முதல் கோரிக்கை ‘காவலர்களின் நண்பன்’ என்கிற சட்டவிரோதப் படையைக் கலைக்க வேண்டும் என்பதாகவே இருக்கட்டும். அப்போதுதான் இது போன்ற கொடூரங்களை ஓரளவாவது குறைக்க இயலும்! என அவர் தெரிவித்துள்ளார்.