திமுக முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதுடன், சித்தாந்த ரீதியாக திமுகவின் மீதான மக்களின் பார்வையை மாற்றிவருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், அண்மையில் திமுக எம்பிக்கள், தயாநிதி மாறனும் டி.ஆர்.பாலுவும் திமுக சார்பில் பெறப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளரிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தலைமை செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள், அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை போல நடத்தியதாக கூறினார். தயாநிதி மாறனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தயாநிதி மாறன் மனதில் வேரூன்றி இருக்கும் சாதியவாதத்தால் தான், அவர் இப்படியான கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று எதிர்ப்புகள் கிளம்பின. திமுகவின் கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனும் தயாநிதி மாறனின் கருத்துக்கு அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மீது கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி கைதையடுத்து தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கோரியும், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் மனு தாக்கல் செய்தனர். 

அந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு மீது வழக்குப்பதிவு செய்த கோவை காவல்துறையினர் விளக்கமளிக்க கோரி மே 29ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. அதுவரை தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு மீது காவல்துறை எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.