கொரோனா அச்சுறுத்தலால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதுகுறித்த ஆலோசனைகளும் நடந்துவருகின்றன.

ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின் தங்கிய அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலிகள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு சலுகைகளும் அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. 

ஊரடங்கால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாத சூழல் உள்ளது. அல்லது ஏஜெண்டுகள் குறைவான விலைக்கு விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. 

இந்நிலையில், வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களையும் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையையும் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், மே மாத ரேஷன் பொருட்களையும் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொண்டு மேலும் ஒரு உத்தரவையும் பிறப்பித்தது. 

இந்த பொதுநல மனுவை நீதிபதிகள் கருணாகரன், ஹேமலதா அமர்வு விசாரித்தது. அப்போது விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.