சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்துவிடுவோம் என வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு அதிரடியாக எச்சரிக்க விடுததுள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் பொருள் செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது சென்னை-சேலம் 8 வழிச்சாலை. சென்னை வண்டலூர் பகுதியில் இருந்து சேலத்தில் இருந்து பூலாவரி கிராமம் வரையிலான 8 வழி பசுமை வழித்தடம் ஏற்படுத்துவதற்கான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி பெருமளவில் முடிந்து விட்டது.

இந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், அவரவர் பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடபட்டு வந்தனர். போராட்டங்கள் மட்டுமின்றி சில தனிப்பட்ட விவசாயிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தற்காலிகமாக தடை விதித்து சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அதனுடைய தொடர் விசாணை இன்று நடைபெற்றது.

இன்றைய விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் இருந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அதில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நிலம் எவ்வாறு கையகப்படுத்தப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கறிஞர்கள் அளிக்கும் தகவல்களுக்கும் நடைமுறையில் அதிகாரிகள் செயல்படுவதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என்று நீதிபதிகள் குற்றம் சாட்டின. அதுமட்டுமின்றி மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவு போடப்பட்டபின்பும், இதற்காக தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு வழக்கறிஞரிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் செயல் முறையற்ற நடவடிக்கை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசை எச்சரித்தனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.