நாளை  நடைபெறுவதாக  உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்.சை மீண்டும் கட்சியில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் இணைத்தார். இதனால் எடப்பாடி அணி, டி.டி.வி.தினகரன் அணிகளுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

கடந்த 28ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அன்று மாலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 12ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது என்றும், அதற்கு தடைவிதிக்கக் கூறியும் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாக இது போன்ற வழக்குகளை தொடரக்கூடாது என வெற்றிவேலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த கூட்டத்தில் வெற்றிவேல் கலந்து கொள்ளலாம்இ சாப்பிடலாம் அல்லது வீட்டில் இருக்கலாம் என தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின்  நேரத்தை வீணடித்ததாக கூறி அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.