தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆர்த்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குறைபாடான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். ஆகையால், கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கனிமொழிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

 

இதனிடையே, தெலங்கானா மாநில ஆளுநராக சமீபத்தில் தமிழிசை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதால் தொடர்ந்து வழக்கை நடத்த விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது. வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது பற்றி அக்டோபர் 14-ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வழக்கு வாபஸ் குறித்து 10 நாட்களுக்குள் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் என தமிழிசைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது 29-ம் தேதிக்குள் பதிலளிக்க சந்தானகுமாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.