பாஜகவுக்கு எத்தனை சதவீதம் வாக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பினால், மாநிலம் தழுவிய அளவில் ஒரு ஆறு சதவீத வெற்றி பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது கிடைத்தாலே பாஜகவுக்கு பெரிய வெற்றிதான், இதற்கு முன்பாக பல தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிட்டிருக்கிறது, அதில் எல்லாம் பாஜக ம் 2.1 சதவீதம் வாக்குகள்தான் பெற்றிருக்கிறது.
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி திமுகவுக்கும், ஒருவேளை தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுக-பாஜக கைகோர்க்கும் பட்சத்தில் நாகர்கோயில், கோவை மாநகராட்சிகள் அக்கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாளை நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:- ஒருவழியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் அளவிற்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. வழக்கமாக அதிகம் பதிவாக கூடிய இடங்களில் கூட 70 முதல் 75 சதவீதம் வாக்குப்பதிவு மட்டுமே நடந்துள்ளது.
சென்னை போன்ற இடங்களில் 40 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த அளவுக்கு வாக்குச் சதவீதம் குறைந்ததிலிருந்து மக்கள் உற்சாகமாக வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது. மாநில அரசின் மீது அந்த அளவிற்கு மக்கள் உற்சாகமாக இல்லை என்பதுதான் இதன் உள்ளர்த்தம். பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. ஆளுங்கட்சிக்குதான் சாதகமாகவும் இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.

குறைந்த அளவிலான வாக்கு பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும், யாருக்கு பாதமாக இருக்கும்:- வெறும் 43 சதவீதம்தான் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது என்றால், 57 சதவீதம் பேர் வாக்கு செலுத்தவில்லை என்று அர்த்தம். பெரும்பாலும் அரசுக்கு எதிராக பேசுபவர்கள் கூட வாக்கு போடவில்லை, திருவாளர் பொது ஜனங்களின் சோம்பேறித்தனம்தான் இதற்கு காரணம். அதாவது தற்போது பதிவாகியுள்ளது 43 சதவீத வாக்கு என்பது நடுநிலையாளர்கள் பொதுமக்களுடைய வாக்காக எடுத்துக் கொள்ள முடியாது, இது பெரும்பாலும் Committed Vote ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான வாக்குகளாக மட்டுமே இருக்க முடியும். அப்படியென்றால் அந்த வாக்குகள் திமுகவின் வாக்குகளாக தான் இருக்கும். எப்போதும் சென்னையில் குறைந்த சதவீத வாக்கு பதிவாகிறது என்றால், அது திமுகவுக்குதான் சாதகமாக இருக்கும், ஏன் என்றால் அது மொத்தம் திமுகவின் வாக்குகள் என்றுதான் அர்த்தம்.
அப்படியென்றால் சென்னை மாநகரத்தில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறப் போகிறது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம். இதற்கு பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் 57 சதவீதம் பேர் வாக்களிக்காமல் தவிர்த்ததுதான், இதுதான் திமுகவின் வெற்றிக்கு சாதகமாக அமையவுள்ளது. ஒரேஒரு ஓட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும். வாக்கு என்பது ஜனநாயக கடமை, இதைப் பலமுறை கூறியும் மக்கள் அலட்சியம் காட்டுவது தான் வேதனையாக உள்ளது. இந்த வெற்றி திமுக பெற்ற வெற்றி அல்ல திமுகவுக்கு வாக்களிக்காமல் இருந்து வாரி வழங்கிய வெற்றி என்றுதான் சொல்வேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் ஓட்டு போடாமல் தவிர்த்திருப்பவர்கள் அத்தனை பேரும் படித்தவர்கள்தான்.

அதிமுக- பாஜக தனித்தனியாக தேர்தலை சந்தித்துள்ள நிலையில், செல்வாக்குள்ள கொங்கு மண்டலத்தில் இது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும்.? நல்ல மாற்றமாக இருக்குமா? அல்லது நேரெதிரான மாற்றமாக இருக்குமா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் இருந்து வருகிறது. அதிமுக பாஜக பிரிந்ததால் திமுக கோவை மாநகராட்சி கைப்பற்றி விடுமோ? என்ற சந்தேகத்தில் பலரும் உள்ளனர். பலரும் கோவையில் கருத்துக் கணிப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேசியதில் கோவையைப் பொருத்தவரையில் பாஜகவுக்கு 5 லிருந்து 8 வரை சீட்டுகள் இந்த தேர்தலில் கிடைக்க வாய்ப்புள்ளது, கடந்த முறை 2 இடங்கள் கிடைத்தது, இப்போது எட்டு இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் அதிமுகவுக்கு குறைந்தது 40 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கோவையில் மொத்தம் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 100 அந்த நூறில் 51 எடுத்தால்தான் மெஜாரிட்டி, ஒருவேளை அங்கு அதிமுக 40 இடங்களையும், பாஜக 40 இடங்களையும் பெற்றால் அங்கு பாஜக கிங்மேக்கராக இருக்கலாம்.
அதாவது பாஜக யாருடன் கைகோரிக்கிறதோ அவர்கள் தான் மாநகராட்சியை கைப்பற்ற முடியும், நிச்சயமாக பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை, அதிமுகவுடன் கூட்டு வைக்கவே வாய்ப்பிருக்கிறது. அக தேர்தலுக்கு பிறகு அந்தந்த கள சூழலுக்கு ஏற்ப பாஜகவுக்கும்- அதிமுகவுக்கும் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதன்மூலமாக பெருவாரியான மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளை அவர்கள் பங்கிட்டுக் கொள்ள முடியும். இதேபோல் பாஜக செல்வாக்காக இருக்கிற பகுதிகளில் ஒன்று நாகர்கோவில், நாகர்கோயில் நகராட்சியாக இருந்தபோதே நகராட்சி தலைமைப் பதவி பாஜகவுக்கு கிடைத்தது. அந்த வகையில் இந்தமுறை பாஜகவுக்கு நாகர்கோயில் மேயர் பதவி கிடைக்கலாம், அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நாகர்கோயிலை பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக பாஜக உள்ளது. அந்தவகையில் இந்த தேர்தலில் தன்னுடைய உண்மையான சக்தி மற்றும் செயல்பாடுகளை பாஜக உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழகம் தழுவிய அளவில் பாஜகவுக்கு எவ்வளவு சதவீதம் வாக்கு கிடைக்கும்:- பாஜகவுக்கு எத்தனை சதவீதம் வாக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பினால், மாநிலம் தழுவிய அளவில் ஒரு ஆறு சதவீத வெற்றி பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது கிடைத்தாலே பாஜகவுக்கு பெரிய வெற்றிதான், இதற்கு முன்பாக பல தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிட்டிருக்கிறது, அதில் எல்லாம் பாஜக ம் 2.1 சதவீதம் வாக்குகள்தான் பெற்றிருக்கிறது. இந்த முறை 6% கிடைத்தால் மூன்று மடங்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று அர்த்தம். ஆனால் வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான் இதன் உண்மை தெரிய வரும். இதற்கு முன்னர் கடந்த நகர உள்ளாட்சி தேர்தலில் 200 பிளஸ் இடங்களை பாஜக பெற்றிருந்தது. இந்தமுறை 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இதன் மூலம் பாஜக தன்னுடைய முழு சக்தியை தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும், அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் அதைவைத்து பேர வலிமையை கூட்டிக்கொள்ள முடியும், எந்த இடத்தில் வலுவாக இருக்கிறோம், என்ற இடத்தில் இன்னும் வலுமைபெற வேண்டும் என்பதை அறிய முடியும், எந்த இடத்தில் எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெறவே முடியாது என்ற இடங்கள் தெரிந்து விட்டால் அந்த இடத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்கலாம். மொத்த த்தில் பாஜகவுக்கு இது வளர்ச்சியுடன் கூடிய சுயபரிசோதனை தேர்தல் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
