"வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மிக அதிகமாக இருக்கும்."
பொதுமக்கள் அவசியம் இல்லாமல் இன்று இரவு முதல் நாளை வரை வெளியே வர வேண்டாம் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னையில் கடந்த 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வரை விடாமல் கனமழை பெய்தது. 23 செ.மீ. மழை பெய்ததாதால், சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. தாழ்வானப் பகுதிகளில் சூழந்த வெள்ளம், இன்னும் வடியாமல் மக்கள் அவதியில் உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மழை, வெள்ள கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது அதிக கன மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மிக அதிகமாக இருக்கும்.
எனவே, பொதுமக்கள் அவசியம் இல்லாமல் இன்று இரவு முதல் நாளை வரை வெளியே வர வேண்டாம். நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு சென்று செல்பி எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். எக்காரணம் கொண்டும் நீர்நிலைகளைக் கடக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். சென்னையில் மழை, வெள்ள நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் 3 பேரிடர் மீட்பு படை உள்ளது. மழை நின்ற பிறகுதான் சேதங்களைக் கணக்கிட முடியும். மழைக்குப் பிறகு அந்தப் பணி தொடங்கும்” என்று கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
