பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வழங்கல் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் சார்ந்த அலுவலகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் வகையில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனைகளின் படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் பொது மக்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. covid-19 கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க சென்னை மாநகர பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அங்காடிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள 31-7-2020 வரை சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இயங்க உள்ளன. 

எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வழங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள், சார்ந்த அலுவலகங்களில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டுதல்களின் படி கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆணையாளர் திரு கே.பிரகாஷ் அவர்கள் தலைமையில் இன்று(10-7-2020) ரிப்பன் மாளிகை கூட்டஅரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவிட்-19 தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்கள் அறிவுரைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் குறித்த கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் அவர்கள் பேசியதாவது:- அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து நுகர்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் உட்பட அனைவரும் 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அலுவலக முகப்பு வாயிலில் கண்டிப்பாக கைகளை கழுவுவதற்கு ஏதுவாக கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக கூட்டுறவு அங்காடிகளில் 1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகளை இரண்டாக  பிரித்தல் அல்லது பெரிய பரப்பளவு கொண்ட இடங்களுக்கு மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கும் படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்ந்தவர்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான்,  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு.கே பாலசுப்ரமணியம், கூடுதல் பதிவாளர் திருமதி கிரேஸ் லால்ரின்டகி பட்சுவாவ், முன்னோடி வங்கி மேலாளர் திரு.எஸ் கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.