தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பனை செய்ய முன்வருபவர்களுக்கு உடனே அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்,  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைப்பிடிக்க ஏதுவாக இந்த நடவடிக்கையை அவர் அறிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது , இதுவரை 738 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது,  அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியில் உள்ள  பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் உடனுக்குடன்  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மக்கள் அதிக அளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்வதின் மூலம் அங்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினாலும் ,  சமூக இடைவெளியை அங்கு கடைப்பிடிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் ,  தற்போது மக்களுக்கு  தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதனடிப்படையில் சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார் .  முதற்கட்டமாக சுமார் ஐந்தாயிரம் தள்ளு வண்டிகள் மூலம் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார் ,  ஐந்தாயிரம் மூன்று சக்கர தள்ளு வண்டி கடைகளும்,  2000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் . 

அதேநேரத்தில் தள்ளுவண்டியில் காய்கறி மளிகைப் பொருள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய யார் முன்வந்தாலும் ,  அவர்களுக்கு உடனே அனுமதி தரப்படும் எனவும் அவர் கூறினார் அதாவது ஊரடங்கு  முடியும் வரை மக்கள் வெளியில் வருவதை தடுக்கவும் ,  மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .  அதேபோல் வெளியூர் செல்பவர்கள் தாமாக முன்வந்து கொரொனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  அதைப்போல் வீடுவீடாக வந்து  ஆய்வு நடந்தும் போது மக்கள் மறைக்காமல் தங்களுக்கு உள்ள உடல்நலம் பிரச்சினைகளை கூற வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார் ,  மேலும் சென்னையில் இதுவரை எங்கும் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை எனவும் அவர் கூறினார் .