தற்போது அரசின் வேண்டுகோளுக்கு முரணாக மாநகராட்சியின் உத்தரவு அமைந்துள்ளது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.  

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பாதித்து வருகின்றனர். உயிர் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து மக்களைப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

வீடு, வீடாகச் சென்று அனைவருக்கும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து, மக்களைக் காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், சளித் தொந்தரவு போன்றவை கொரோனாவிற்கான அறிகுறியாகும். இத்தகையோர்கள், அலட்சியப்படுத்தாமல், உடன் மருத்துவரை அணுக வேண்டும் என அரசு தொடக்கம் முதல் தொடர்ந்து பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தது.

தற்போது அரசின் வேண்டுகோளுக்கு முரணாக மாநகராட்சியின் உத்தரவு அமைந்துள்ளது. ஒருவர் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் அவரும் அவரது குடும்பத்தாரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது அச்சமூட்டுவதாக உள்ளது.

யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று உத்தரவிட்டது போன்று உள்ளது. மாநகராட்சி இத்தகைய உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரவும், மக்களைக் காப்பாற்றவும் அரசும், மாநகர நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என  முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.