பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 106 நாட்களுக்கு பிறகு கடந்த 4-ம் தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திரம் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. சுதந்திர பிம்பங்கள் முடக்கப்படுகின்றன என்பதை ஒருபோதும் நீங்கள் மறுந்துவிடுவேக்கூடாது. 

இப்போது, உங்களிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால், அது அனைத்து மக்களுடைய சுதந்திரமும் மறுக்கப்பட்டதற்கு ஈடாகும். சுதந்திரத்தை யாராலும் பிரிக்க முடியாது. உங்கள் சுதந்திரம் தான் என்னுடைய சுதந்திரம். என்னுடைய சுதந்திரம் தான் உங்களுடைய சுதந்திரம். உங்கள் சுதந்திரத்தை நாள் பாதுகாக்காவிட்டால், என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் பாதுகாக்க முடியாது. 

இந்த நாட்டிலேயே வலதுசாரி, பிற்போக்கு சுதந்திரத்தை பறிக்கக்கூடிய பாசிச அரசு முறையை நோக்கி இந்த நாடு நடந்துக் கொண்டிருக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக தமிழக மக்கள் காட்டும் எச்சரிக்கையை அனைத்து மாநில மக்களும் காட்டினால் உண்மையிலேயே இந்தியா சுதந்திர நாடாக மாறும். வழக்கை பற்றி நான் பேசப்போவது கிடையாது. என்னை சிறையிலேயே ஏன் அடைத்தார்கள் என்றால், என்னுடைய மன உறுதியை குலைக்க வேண்டும் என நினைத்தார்கள். என் மன உறுதி ஒருநாளும் குலையாது. 

மேலும், பேசுகையில், இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பொருளாதார சூழலை பொறுத்தவரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.