சேலம் மாவட்டம் ஓமலூரில்  செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , கேரளம்,  கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்,  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்   90 அடியை எட்டியவுடன் சம்பா சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.

காவிரி ஆற்றில் கரூர் அருகே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.  மேலும்,  3 இடங்களில் தடுப்பணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையிலேயே அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம்  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

காவிரி - கோதாவரி இணைப்புக்குப் பின்னர்,  அதிலிருந்து வரக் கூடிய உபரி நீரையும் சேலம் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். 

மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை மட்டுமே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கும் என்பதெல்லாம் வீண் வதந்தி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..