2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ. 5 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சசிகலா அண்ணி இளவரசியின் மருமகன் மீது நீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இத்தேர்தலில் அதிமுக 136 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் சீட்டு வாங்கித் தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கருணாகரன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். 


கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேலத்தில் உள்ள தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக கூறி கருணாகரனிடம் ரூ. 5 கோடியை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜன் பெற்றதாகவும், ஆனால் சொன்னப்படி சீட்டு வாங்கி தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் அவர் ஏமாற்றிவிட்டதாக ராஜராஜான் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கருணாகரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ராஜராஜன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாகரன் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெ.பரத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் மாதம் 5-ஆம் தேதிக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளவதாகத் தெரிவித்தார்.