ஜெயலலிதா இருந்தபோது அதிமுக ராணுவம் போல் கட்டுகோப்புடன் இருந்தது. ஜெயலலிதாவின் விரலசைவு, கண்ணசவில் கட்டுப்பட்டுக் கிடந்தது. மறுத்து பேசவோ, எதிர்த்து கூறவோ ஆளில்லை. மறுக்கவும், எதிர்க்கவும் முடியாது. மீறி தவறிழைத்தால் அது ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சென்று பதவி பணாலாகி விடும். அதேபோல் அங்கு கட்சியின் சீனியர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். அதேவேளை சீனியர்கள் ஓரம்கட்டப்பட்டு எளிய மனிதனையும் எம்.எல்.ஏ.,வாக்கி, அமைச்சராக்கி அழ்கு பார்ப்பார் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எடப்பாடியாரிடம் கட்சியும், ஆட்சியும் வந்திருக்கிறது. இப்போதும் அ.தி.மு.க. கட்டுக்கோப்பான கட்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே சில சலசலப்புகள் எழுகின்றன. சில நேரங்களில் நடவடிக்கை எடுக்க என்ன அம்மாவா இருக்கிறார்? எனும் அசட்டுத் தைரியமும் சிலருக்கு வந்து போகிறது. ஆனால் அந்தப்பேச்சும் மணிகண்டனிடம் அமைச்சர் பதவியை பிடுங்கியதில் இருந்து சற்று ஒடுங்கி போனது. 

அம்மா போல் அதிரடியாய் களையெடுக்க தயங்கமாட்டார் எடப்பாடியார், இதற்கு கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸும் தடை சொல்லமாட்டார் எனும் எண்ணம் வலுவாக ஏற்பட்டுவிட்டது. சூழல் இப்படி இருக்கையில், கூடிய விரைவில் அ.தி.மு.க.வில் அதிரடியாய் உட்கட்சி களையெடுப்புகள், புதிய நிர்வாகிகள் மேளா துவங்குகிறது! என்கிறார்கள். தமிழக அரசாங்கம் புதிதாய் உருவாக்கியிருக்கும் தென்காசி உள்ளிட்ட புதிய மாவட்டங்களுக்கான புதிய கழக செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 

பழைய மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சியில் பெரிய அக்கறை காட்டாத மாவட்ட செயலாளர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கழகத்துக்கு அதிகம் வெற்றியை ஈட்டித் தராத மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கையை எடுத்து, அவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, அம்மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் நபர்களை மாவட்ட செயலாளர் பதவியில் அமர வைக்க இருக்கிறார் எடப்பாடியார் என்று அதிமுகவில் பேச்சுக்களும், தகவல்களும் எழுந்துள்ளன. சமீபத்தில் ஊராட்சி கிளை நிர்வாகிகளை அடியோடு ரத்து செய்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் உத்தரவிட்டனர். ஆகையால் எதுவும் நடக்கலாம் என்பதே தற்போதைய நிலவரம்.