1008 இருந்தாலும் மோடி மோடி தான்..! 

ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவிற்கு மத்தியில் ஆளும் பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி சில எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் பாஜக அதற்கு உடன்படவில்லை என்பதால், பாஜகவில் இருந்து விலகிக்கொண்டார் சந்திரபாபு நாயுடு. அதன்பின்னர் தென் மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் பாஜகவிற்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்க திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அது குறித்த மாநாடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கி இருப்பதற்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி "தனது எம்பிக்கள் மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இதேபோன்று அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் .அம்மாநிலத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படும் என நம்புகிறோம் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக டெல்லிக்கு சுயாட்சி வழங்கும் விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திரமோடியை கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார்.

 

அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புறக்கணித்து, துணைநிலை ஆளுநர் மூலம் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த அதே அரவிந்த் கெஜ்ரிவால் தான் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முக்கிய மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.