முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறப்பு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை, நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய மருத்துவமனை வளாகத்துக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம், புதுவை ஆளுநர் கிரண்பேடி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் அப்போலோ மருத்துவமனை சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், யாகங்களும், மண்சோறு-அங்கபிரதட்சணம்-பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களும், ஜெயலலிதாவின் நுரையீரல் பிரச்சனை தீர வெள்ளியால் செய்யப்பட்ட நுரையீரல் காணிக்கையும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோயிலில், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தார். பூஜைக்கு பிறகு, கோயிலில் இருந்து பிரசாதம் மற்றும் சாமிக்கு அணிவிக்கப்பட்ட அங்கவஸ்திரம் உள்ளிட்டவை சென்னை, அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினர் சேகர் கொண்டு வந்தார்.