ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால், அதிருப்தியடைந்த அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடனான தெலுங்குதேசம் கட்சியின் கூட்டணியை முறித்துக்கொண்டார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விட்ட தூதுவையும் நாயுடு நிராகரித்துவிட்டார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிற்கு அமித் ஷா கடிதம் எழுதியிருந்தார். 

அதில், ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக நீங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை. அரசியலுக்காகவே வெளியேறி இருக்கிறீர்கள். ஆந்திர மாநிலத்தின் நலனில் பாஜகவும் மத்திய அரசும் எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின், 5 மிகப்பெரிய கட்டுமானப் பணிகளை மத்தியஅரசு தொடங்கி இருக்கிறது. ஆந்திர மாநில அரசு தங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை கடந்த 2014-15ம் ஆண்டு இருந்ததாகக் கூறுவது மிகப்பெரிய பொய்யாகும். ஆந்திர மாநிலத்தில் பின் தங்கியுள்ள 7 மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1050 கோடி சிறப்பு வளர்ச்சி நிதி அளித்தது. இதில் 12% தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 88% நிதி செலவிடப்படாமல் உள்ளது என அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, பொய்யான தகவல்களை கொடுப்பது அவர்களது இயல்பை காட்டுகிறது. தற்பொழுது வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதிகளை வழங்குகிறது. அப்படி ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு நிதிகள் வழங்கப்பட்டிருந்தால், நிறைய தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விட்ட சமாதான தூதுவை புறக்கணித்த சந்திரபாபு நாயுடு, அமித் ஷாவிற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.