ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2000 கோடி கணக்கில் வராத பணம் சிக்கி உள்ளதால் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 6 நகரங்களில் சில வாரங்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கியவரும், முன்னாள் உதவியாளருமான ஸ்ரீநிவாசராயின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல குற்றங்களை நிரூபிக்கும் வகையிலான முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த முக்கிய உள்கட்டமைப்பு ஒப்பந்த பணிகள் சட்ட விரோதமாக போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் ரூ.2000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 25 க்கும் அதிகமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநிவாசராவ் வீட்டில் இருந்து மட்டும் ரூ.85 லட்சம் மதிப்பிலான பணம், ரூ.71 லட்சம் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது ஊழல் நடந்ததாக ஆளும் ஒய்எஸ்ஆர்., காங்., குற்றம்சாட்டி இருப்பதை சந்திரபாபு நாயுடு மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது உதவியாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.