தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி(ஆந்திர ஆளுங்கட்சி), சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் அசோக் கஜபதி ராஜூ, ஒய்.எஸ்.சௌத்ரி ஆகிய 2 அமைச்சர்களும் பதவிவிலகினர்.

அதற்குப்பிறகும் மத்திய அரசு செவிமடுக்காததால், பாஜகவுடனான கூட்டணியை சந்திரபாபு நாயுடு முறித்துக்கொண்டார். மக்களவையில், மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவந்தார். மக்களவை தொடர்ந்து முடக்கப்படுவதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது. ஆனால் பாஜகவின் சமாதான முயற்சிக்கு, முடியாது என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஜனா சௌத்ரியிடம் இவ்விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, மாநிலப் பிரிவினை மசோதாவில் கூறியபடி, விசாகப்பட்டினம் தனி ரயில்வே அமைப்பு, கடப்பாவில் இரும்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்குவதாக சுஜனா சவுத்ரியிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தத் தகவலை, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சுஜனா சௌத்ரி நேற்று காலை கூறினார். அப்போது அவருக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின்னர், எதுவாக இருந்தாலும் அவர்கள் நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டும். இப்போது, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினால், நம் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிடுவார்கள். ஆதலால், இந்த யோசனையை, நான் நிராகரித்ததாக ராஜ்நாத் சிங்கிடம் கூறிவிடுங்கள் என சந்திரபாபு நாயுடு தெளிவாக தெரிவித்துவிட்டாராம்.