இந்தியாவின் ஹைடெக் முதல்வர் யார்? என்று கேட்டால், பச்ச குழந்தையும் சொல்லும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுதான்! என்று. 

அந்த நாயுடுவுக்கும், இதுவரையில் இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் செம்ம ஹைடெக் மனிதரான நரேந்திர மோடிக்கும் சமீப காலமாய் செம்ம லடாய். காரணம் என்ன? என்றால்...ஆந்திர மாநிலத்துக்கு தேவையான நிதியை சரியாக மத்திய அரசு ஒதுக்கவில்லை! என்பதுதான். ஆனால் இது வெளியில் சொல்லப்படும் பொது காரணம் என்கிறார்கள். 

உண்மையில் உள்ளுக்குள் வேறு காரணம் இருக்கிறதாம். அது, அம்மாநில கவர்னர் நரசிம்மமனே! என்கிறார்கள். பல வருடங்களாக ஆந்திர கவர்னராக இருக்கும் இந்த நரசிம்மனை மாற்றச் சொல்லி அடம் பிடிக்கிறாராம் நாயுடு. காரணம், மாநில நடவடிக்கைகளை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கும் அவர், நாயுடு மீதிருக்கும் தவறுகளை பிரதமர் அலுவலகத்துக்கு ‘நோட்’ போட்டு அனுப்பிவிடுகிறாராம். இது நாயுடுவின் கவனத்துக்கு வர கொதித்துவிட்டார். 

அதனால் நரசிம்மனை மாற்ற சொல்லி நாயுடு பல முறை முறையிட்டும் மோடி கண்டு கொள்ளவேயில்லையாம். இதன் விளைவாகவே பிரதமருக்கு எதிராக நாயுடு நறநறத்து குதிக்கிறார்! என்கிறார்கள். நாயுடு மற்றும் நமோவுக்கு இடையிலான இந்த ஜல்லிக்கட்டு எப்போது முடியுமோ? என்பதே டெல்லியின் தற்போதைய கவலை.