chandra Babu naidu out from national democretic front
மத்திய அரசு நேற்று வெளியிட்ட பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு நிதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் கடுப்பான அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் நேற்று 2018-2019-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டின் போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்திருந்தார். . இதையடுத்து ஆந்திராவிற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதி தருவதாக மத்திய அரசும் உறுதி அளித்து இருந்ததாக கூறப்படுகிறது..
கடந்த பல மாதங்களாக இந்த சிறப்பு நிதியை ஆந்திரா மாநில அரசு கேட்டு வருகிறது. அதுபோல புதிய திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் மத்திய பொது பட்ஜெட்டில் ஆந்திரா மாநில அரசுக்கு சிறப்பு நிதியும் மற்றும் புதிய திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால் பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதனால் கடுப்பான தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். மேலும் இதுபற்றி சந்திர பாபு நாயுடுவுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நாளையும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 16 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் 2 தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்தும் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலக முடிவெடுத்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
