chanakya period gst.... Question for M.A.students
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில், சாணக்கியர் காலத்தில் ஜி.எஸ்.டி. வரியின் இயல்பு எப்படி இருந்தது என்று முதுகலை அரசியல் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வியால் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
மவுரியர்கள் ஆட்சிக் காலம் என்பது ஏறக்குறைய 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் கவுடில்யர் எனச் சொல்லப்படும் சாணக்கியர். இவர் தான் அர்த்தசாஸ்த்திரத்தை எழுதியவர். அவர் காலத்தில் ஜி.எஸ்.டி. வரி எப்படி இருந்தது?, இயல்பு என்ன?, எப்படி வசூலிக்கப்பட்டது? என்று கேட்கப்பட்ட கேள்வி மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தேர்வு
வாரணாசியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் பனாராஸ் இந்து பல்கலைக்கழகம். இங்கு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தேர்வுகள் நடந்து வருகின்றன. முதுகலை அரசியல் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு முதல்நிலை பருவத் தேர்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், “பழங்கால மற்றும் சமகால இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள்” என்ற பாடத்துக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.
அதிர்ச்சி
அதில், “ கவுல்டில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி. வரி எப்படி இருந்து குறித்து கட்டுரை எழுதுக” என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்த பெரும்பாலான மாணவர்கள் செய்வதறியாமல் பேனாவால் தலையைச் சொறிந்து கொண்டனர்.
குழப்பமான கேள்விகள்
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரி கொண்டுவரப்பட்டது, கவுடில்யர் வாழ்ந்த காலம் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அப்போது எப்படி ஜி.எஸ்.டி. வரி இருந்திருக்கும்? என மாணவர்கள் குழம்பினர்.

ஒட்டுமொத்தமாக இந்த கேள்வித்தாள் மிகுந்த கடினமாக இல்லாவிட்டாலும் கூட, இதுபோன்ற கேள்விகள் மாணவர்களை குழப்பிவிட்டன. மற்றொரு கேள்வியாக, “ உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்தது மனுதர்மரா, எழுதுக” என்ற கேள்வியும் இருந்தது.
ஆனாலும், இந்த கேள்விகளுக்கு சில மாணவர்கள் தங்களால் இயன்ற பதிலை எழுதிவிட்டு, தங்களின் பேராசிரியர்களைச் சந்தித்து விவரங்களைத் தெரிவித்தனர்.
சந்தேகமாக இருக்கு
பனாராஸ் இந்து பல்கலையில் பணியாற்றும், பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் கூறுகையில், “ இந்த கேள்வி நாங்கள் கற்பிக்காத பாடம் தவிர்த்து, வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. கவுடில்யர் மற்றும் மனு தாங்கள் வாழ்ந்த காலத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிந்தனையாளர்களாக இருந்தனர். ஆனால், அப்போது ஜி.எஸ்.டி. அல்லது உலகமயமாக்கல் இருந்ததா? என எனக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
தயார் செய்தவர்களே பொறுப்பு
பல்கலையின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் ஆர்.பி. சிங் கூறுகையில், “ தேர்ந்த வல்லுநர்கள், சிறப்பு வல்லுநத்துவம் பெற்றவர்களால் கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கேள்விகளை தயார் செய்த வல்லுநர்கள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என தெரிவித்தார்.
விமர்சனம்
டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலையில் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர் எம்.என். தாக்கூர் இந்த கேள்விகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேட்கவே கூடாது
அவர் கூறுகையில், “ஆய்வுக்கட்டுரைக்காக இன்றுள்ள ஜி.எஸ்.டி. வரி முறை போன்று அர்த்தசாஸ்திரத்தில் இருக்கிறதா என்று புலனாய்வு செய்யக் கூறியிருந்தால் ஆய்வு செய்து அதில் உள்ள சிறந்த அம்சங்களை பட்டியலிட்டு இருக்கலாம். ஆனால், தேர்வு என்பது, மாணவர்கள் படித்த பாடங்களில் இருந்து அவர்களை சோதனை செய்வதாகும். இதுபோன்ற கேள்விகளை கேட்கவே கூடாது. இந்த கேள்வித்தாள்களை தயார் செய்தவர்கள் மூளையில்லாதவர்கள்.
ஒரு விஷயத்தில் பழங்கால சிந்தனைக்கும், உலகளாவிய சிந்தனைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், கவுடில்யர் காலத்தில், உலகளாவிய சிந்தனை என்ற இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
