பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி என பொறியியல் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் அதற்கான அவசாகம் முடிவடைகிறது. 

  

தமிழகத்தில், அண்ணா பல்கலை ககழகத்தின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, உயர்கல்வித் துறை சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான இணைய வழி பதிவு, கடந்த ஜூலை, 15ல் துவங்கி, ஆக., 16ல் முடிவடைந்தது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய, ஆக., 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பல்வேறு பாட திட்டங்களில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவும், சில பாட திட்டங்களின் சான்றிதழ்களும் வரவேண்டியிருந்தது. இதன் காரணமாக, சான்றிதழ் பதிவேற்றத்துக்கு மாணவர்களுக்கு  கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், இன்று மாலை 05:00 மணியுடன் முடிகிறது. கலந்தாய்வுவுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், இன்று மாலைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு பொறியியல் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.