’உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா. இங்கே கூடவா செல்ஃபி எடுப்பீர்கள்?’ என்று ராணுவ வீரரின் இறுதி அடக்கத்தின்போது செல்ஃபி எடுத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் ஒருவரை நெட்டிசன்கள் கிழித்துத்தொங்க விட்டு வருகின்றனர். கடும் எதிர்ப்புக் கிளம்பியும்  அந்தப்புகைப்படத்தை தனது முகநூலில் இருந்து அல்போன்ஸ் நீக்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறைஅமைச்சராக அல்போன்ஸ் கண்ணன்தானம் இருக்கிறார்.  புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய மரியாதையுடன் உடலை அடக்கம் செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், திரிகைபேட்டா கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சிஆர்பிஎப் வீரரும் மரணமடைந்தார். அவரின் உடல் விமானம் கொண்டுவரப்பட்டு, நேற்று சொந்தகிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த இறுதிச்சடங்கின் போது, வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின் உடலுக்கு முன் நின்றுகொண்டு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்ஃபிஎடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். வீரர் உடல் முன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் அல்போன்ஸின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த நிமிடம் வரை அல்போன்ஸ் கண்ணன் தானம் தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவோ, பதிவை நீக்கவோ இல்லை.