முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு அவசரமாக சென்று சந்தித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றதை தொடர்ந்து பா.ஜ.க – அ.தி.மு.க இடையிலான மறைமுக விரிவு மறைமுகமாகவே மோசமாகி வருகிறது. 

பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களுடன் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் எழுதப்பட்ட கவிதையும் பா.ஜ.கவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறி வருகின்றனர். 

இதே போல் மத்திய அரசு தான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், தமிழக அரசால் முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே பேட்டி கொடுத்துள்ளார். இவர்கள் எல்லோரையும் விட அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரான தம்பிதுரை ஒரு படி மேலே சென்று பா.ஜ.கவும் தி.மு.கவும் இணைந்து அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க – பா.ஜ.க இடையிலான முறைமுக உறவு மிகவும் வலுவாக இருந்தது. ஆனால் சி.பி.ஐ சோதனைக்கு பிறகு உறவு மிகவும் மோசம் அடைந்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சரி மூத்த அமைச்சர்களும் சரி பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் அழைத்து பிரச்சனை குறித்து பேச எடப்பாடி பழனிசாமி விரும்பியுள்ளார்.

தகவல் அறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் நேராக எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே சென்று சந்தித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது அறிவிக்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.  ஆனால் உண்மையில் பொன்.ராதாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சி.பி.ஐ ரெய்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தே பேசியுள்ளார்.

 அதற்கு தன்னாலும் நிலைமையை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றும் எதனால் திடீரென சி.பி.ஐ குட்கா விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது என்பதும் புரியாத புதிராக உள்ளது என்றும் தனக்கு உள்ள டெல்லி தொடர்புகளுக்கு கூட விவகாரம் பற்றி முழுமையாக எதுவும் தெரியவில்லை என்று பொன்.ராதாகி முதலமைச்சரிடம் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.   

இதனை அடுத்து சற்று சோர்வான மனநிலையுடனேனே கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றுள்ளார்.