இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஏணுபடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அமைச்சர் புதுப் புது ஐடியா கொடுத்திருப்பது தமிழக அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது வரை அதற்கான முயற்சிகளையோ அல்லது அறிவிப்பையோ மத்திய அரசு வெளியிடவில்லை.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்  நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில்  பங்கேற்ற  மத்திய நீர்வளத்துறை அமைச்சர்  நிதின் கட்காரி , மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருதாக கூறினார்.

இதற்கான நீண்டகால திட்டத்தை அரசு தீட்டி வருகிறது. மராட்டியத்தில் ஓடும் கோதாவரியின் கிளை நதியான இந்திராவதியில் தண்ணீர் எப்போதும் அதிக அளவில் செல்கிறது.

எனவே அங்கிருந்து தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் இணைக்கப்படும். இந்த தண்ணீர் சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் இருந்து சுமார் 1,000 டி.எம்.சி. தண்ணீரை இவ்வாறு இணைப்பதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும். இந்த திட்டம் குழாய் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர மேலும் 30 நதிகளை இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இத்திட்டங்கள் இந்த ஆண்டு தொடங்கி படிப்படியாக செயல்படுத்தப்படும். நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில் வாரியம் எப்போது அமைக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி பறந்து விட்டார்.