கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே விவகாரத்தில்  அம்மாநில முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கு உள்ள தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரித்துவருகிறது. இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினாராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக கூறிவருகிறது. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்திவருகிறது.
இதற்காக கடந்த ஒரு வாரமாக கேரளாவில் பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் பினராய் விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள தனது அலுவலகம் முன்பு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார் முரளிதரன். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது வெறும் தங்கக் கடத்தல் விவகாரம் இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையும்கூட. இந்த விவகாரத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கும் பணம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் முழு விசாரணை நடத்த வசதியாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.